மரக்காணத்தில் நாளை இல்லம் தேடி கல்வித்திட்டம் தொடக்க விழா; முதல்வர் வருகை
- Web feathers
- Oct 26, 2021
- 1 min read
நாளை (புதன்கிழமை) முதற்கட்டமாக இல்லம் தேடி கல்வித்திட்டம் தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட உள்ளது.
விழுப்புரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நாளை (புதன்கிழமை) தமிழக அரசு சார்பில், இல்லம் தேடி கல்வித்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை போக்குவதற்கு நடப்பு கல்வியாண்டிற்கான பட்ஜெட்டில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, பள்ளிக்கல்வித்துறை மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை தீர்க்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, கொரோனா தொற்று பரவல் காரணமாக 1 முதல் 8ஆம் வகுப்புகள் வரை அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடையே கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பை குறைப்பதற்காக தினமும் 1 மணி முதல் 1 மணி 30 நிமிடம் வரையில் தன்னார்வலர்களைக் கொண்டு குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் “இல்லம் தேடி கல்வி” என்கிற திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 1-8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் குறைபாடைப் போக்க, அவர்களின் இல்லங்களுக்கே சென்று பாடம் நடத்தும் “இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் துவக்கி வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், திருச்சி, தஞ்சை, கடலூர் உள்பட 12 மாவட்டங்களில் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார். மேலும் 6 மாத காலத்துக்கு தொடர்ந்து இல்லம் தேடி கல்வித்திட்டம் செயல்படுத்தப்படும் எனவும், கற்றல் இடைவெளியை குறைக்க இல்லம் தேடி கல்வித் திட்டம் உதவும்.
இதன் தொடர்ச்சியாக நாளை இல்லம் தேடி கல்வித்திட்டம் தொடக்க விழா மரக்காணம் அருகே உள்ள முதலியார்குப்பம் பகுதியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழா மாலை 3 மணிக்கு மேல் நடக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள், குறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன், போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டுகள் ஸ்ரீநாதா (விழுப்புரம்), சக்தி கணேசன் (கடலூர்) ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். மேலும் பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இவ்விழாவில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments