மாயார் வனப்பகுதியில் டி-23 புலி பிடிபட்டது
- Web feathers
- Oct 15, 2021
- 1 min read
நீலகிரியில் 21 நாட்களாகப் போக்கு காட்டி வந்த டி-23 புலி இன்று பிடிபட்டது. தமிழக வனத்துறையின் வரலாற்றில் முதன்முறையாக மயக்க மருந்துபோட்டு புலியை பிடித்த வனத்துறையினர்.

நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் உள்ள வசனக்குடி மக்களை டி.23 புலி தாக்கியதாகப் புகார்கள் வந்து கொண்டே இருந்தது. இதனால் அங்கு வாழும் மக்கள் புலியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று போராடியதைத் தொடர்ந்து புலியை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையின் ஈடுபட்டு வந்தனர். இதற்காக வனத்துறையினர் காட்டை சுற்றி 150 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து மோப்ப நாய்களும், கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டன. அதுமட்டுமின்றி கேரள வனத்துறையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இப்படி 20 நாட்களாக புலியை தேடி வந்தாலும் புலி யார் கண்ணிலும் சிக்காமலிருந்தது.
இந்தநிலையில் நேற்று இரவு மசனக்குடி கூடலூர் பகுதியில் புலி ஒன்று உலாவுவதாகத் தகவல் வந்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் அது டி-23 புலி என்பதை உறுதிப்படுத்தினர். புலியைக் கண்டவுடன் 4 மயக்க ஊசிகளை புலியின் மீது செலுத்தினர். ஆனால் இரண்டு ஊசிகள் மட்டுமே புலியின் உடம்பில் பட்டது.
ஊசி உடம்பில்பட்டவுடனே புலி வனத்துறையினரின் கண்களுக்கு மாயமாகி ஒளிந்துகொண்டது. இதனால் இன்று காலை வரை வனத்துறையினர் புலியை அலைந்து திரிந்து தேடினர். மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையிலும் தப்பித்த புலி இன்று மதியம் 2 மணியளவில் சிக்கியது. மாயார் வனப்பகுதியில் சுற்றிய புலியை வலைமூலம் வனத்துறையினர் பிடித்தனர். பின்னர் கூண்டுக்குள் அடைக்கப்பட்டு புலி முதுமலை சரணாலயத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. புலியின் உடம்பில் காயம் ஏற்பட்டு உள்ளதால் சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து பேசிய வனத்துறை அதிகாரிகள் இதுவரை தமிழக வனத்துறையின் வரலாற்றில் புலியை மயக்க மருந்து செலுத்தி பிடித்ததே இல்லை இதுவே முதன்முறையாகும் என்று தெரிவித்தனர்.
Comments