அ.தி.மு.க. ஆட்சியில் போராடிய மக்கள் மீது போடப்பட்ட 868 வழக்குகள் வாபஸ்
- Web feathers
- Oct 12, 2021
- 1 min read
கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ‘நீட்’ தேர்வு மற்றும் டாஸ்மாக்கிற்கு எதிராக போராடிய மக்கள் மீது பதிவு செய்யப்பட்ட 868 வழக்குகளை வாபஸ் பெற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
இதுகுறித்து உள்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழக சட்டசபையில் கடந்த செப்டம்பர் 13-ந்தேதி காவல்துறை மானியக் கோரிக்கையின் போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், ‘நீட்’ தேர்வு மற்றும் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது முந்தைய அரசால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
டி.ஜி.பி. கடிதம்
அதைத்தொடர்ந்து அரசுக்கு போலீஸ் டி.ஜி.பி. கடிதம் எழுதியிருந்தார். அதில், 2011-2021-ம் ஆண்டுகளில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகவும், 2014-2021-ம் ஆண்டுகளில் ‘நீட்’ தேர்விற்கு எதிராகவும் போராட்டம் நடத்தி வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களின் விவரங்களை குறிப்பிட்டிருந்தார். மேலும், அரசு குற்றவியல் தலைமை வக்கீலின் ஆலோசனையின் பேரில் அந்த வழக்குகளை திரும்பப் பெறலாம் என்று கூறியிருந்தார்.
வன்முறை போராட்டங்கள், தூண்டிவிடும் பேச்சு தொடர்பான வழக்குகளும், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளும் இதில் சேர்க்கப்படவில்லை என்றும் டி.ஜி.பி. தெரிவித்திருந்தார்.
868 வழக்குகள் திரும்ப பெறப்பட வேண்டிய வழக்குகளுக்கான பரிந்துரைகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அல்லது சம்பந்தப்பட்ட போலீஸ் கமிஷனர்கள் அளித்துள்ளனர். அதன்படி, ‘நீட்’ தொடர்பான போராட்டங்களுக்கு எதிராக 446 வழக்குகளும் (105 வழக்குகளில் கோர்ட்டு விசாரணை நிலுவை), டாஸ்மாக் தொடர்பான போராட்டங்கள் தொடர்பாக 422 வழக்குகளும் (83 வழக்குகளில் கோர்ட்டு விசாரணை நிலுவை), என மொத்தம் 868 வழக்குகளை திரும்பப் பெறலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அரசு ஆணை வழக்கை திரும்பப்பெறுவது தொடர்பாக அரசு குற்றவியல் தலைமை வக்கீலும் தனது கருத்தை அளித்துள்ளார். அதில், போலீஸ் விசாரணை நிலுவையில் உள்ள வழக்குகளையும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருக்கும் வழக்குகளையும் சம்பந்தப்பட்ட போலீசாரே கைவிட்டுவிடலாம். கோர்ட்டுகளில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை திரும்பப் பெறுவதற்கு, சம்பந்தப்பட்ட அரசு உதவி வக்கீல்கள் மூலம் சம்பந்தப்பட்ட கோர்ட்டுகளில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்துகளை அரசு கவனமுடன் பரிசீலித்து மொத்தமுள்ள 868 வழக்குகளையும் திரும்ப பெறுவதற்கு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Comments