சர்வதேசக் கூட்டத்தில் பங்கேற்கத் தலிபான்களை அழைக்குமா ரஷ்யா!
- Web feathers
- Oct 7, 2021
- 1 min read

ஆப்கானிஸ்தான் தொடர்பாக அக்டோபர் 20ஆம் தேதி நடக்கும் சர்வதேசக் கூட்டத்தில் பங்கேற்கத் தலிபான்களுக்கு ரஷ்யா அழைப்பு விடுக்கவுள்ளது.
இதுகுறித்து ரஷ்ய ஊடகங்கள் தரப்பில், “ஆப்கானிஸ்தான் தொடர்பாக மாஸ்கோவில் அக்டோபர் 20 மாதம் ரஷ்ய அதிபர் புதின் தலைமையில் சர்வதேசக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள தலிபான்களுக்கு ரஷ்யா அழைப்பு விடுக்கவுள்ளது” என்று செய்தி வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து, தஜிகிஸ்தானில் ரஷ்யா ராணுவப் பயிற்சிகளை நடத்தியதுடன், அங்குள்ள ராணுவத் தளத்தில் அதன் ஆயுதங்களையும் பலப்படுத்தியுள்ளது.
மேலும் ரஷ்ய அதிபர் புதின் வியாழக்கிழமை தஜிகிஸ்தான் குடியரசுத் தலைவரான எமோமாலி ரக்மோனுடன் தொலைபேசியில் பேசினார். இரு தலைவர்களும் ஆப்கானிஸ்தானின் சமீபத்திய முன்னேற்றங்களைச் சுற்றியுள்ள பாதுகாப்பு நிலைமைகள் குறித்து விவாதித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் தலிபான்களுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது.
பின்னணி:
ஆப்கனிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியபின் அந்நாட்டைத் தங்கள் பிடிக்குள் தலிபான்கள் கொண்டுவந்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை அகற்றிய தலிபான்கள், இடைக்கால இஸ்லாமிய எமிரேட் அரசை நிறுவப்போவதாக அறிவித்தனர். அதற்கான அமைச்சரவைப் பட்டியலையும் கடந்த செப்டம்பர் 8-ம் தேதி அறிவித்தனர்.
ஆப்கனின் பிரதமராக முல்லா முகமது ஹசன் அகுந்த், அவருக்குத் துணையாக முல்லா அப்துல் கனி பராதரும், மவுளவி அப்துல் சலாம் ஹனாபியும் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் 90களில் தலிபான்களின் ஆட்சி அச்சம் தரும் வகையில் இருந்ததால், அந்நாட்டு மக்கள் அண்டை நாடுகளுக்குத் தப்பிச் சென்று வருகின்றனர். ஆனால், மக்கள் யாரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று தலிபான்கள் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
பதிவு: இந்து தமிழ் திசை
Comments