கடலூர் எம்.பி. ரமேஷ் பெயரை கொலை வழக்கில் இணைத்த சிபிசிஐடி போலீஸார்
- Web feathers
- Oct 9, 2021
- 1 min read
முந்திரி ஆலை தொழிலாளி கொலையான சம்பவத்தில், கடலூர் எம்.பி. டி.ஆர்.வி.எஸ். ரமேஷ் பெயரை கொலை வழக்கில் இணைத்துள்ளனர் சிபிசிஐடி போலீஸார். இதனால், அவரை விரைவில் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பத்தில் கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷூக்கு சொந்தமான முந்திரி ஆலை இருக்கிறது. இந்த ஆலையில் பணிபுரிந்து வந்த கோவிந்தராஜ் (55) என்பவர், திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவரை கடலூர் மக்களவை உறுப்பினரும், ஆலையின் உரிமையாளருமான டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் தாக்கினர்.
இதில், கோவிந்தராஜ் செப்டம்பர் 20-ம் தேதி உயிரிழந்தார் எனக் கூறி, அவரது இறப்புக்கு கடலூர் எம்.பி. டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் தான் காரணம் எனக் கூறி அவரது உறவினர்களும், பாமகவினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக காடாம்புலியூர் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வந்த நிலையில், வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான விசாரணைக் குழு விசாரணை நடத்திவந்தனர்.
இதையடுத்து கொலை வழக்காக பதிவுசெய்து, 5 பேரை ஏற்கெனவே கைதுசெய்த போலீஸார், நேற்று கொலை வழக்கில் கடலூர் எம்.பி. டி.ஆர்.வி.எஸ். ரமேஷ் பெயரையும் இணைத்து வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.
கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவரை கைதுசெய்ய மக்களவையின் செயலரிடம் அனுமதி கோரியிருப்பதாகவும், அதையடுத்து அவரை விரைவில் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பதிவு: இந்து தமிழ் திசை
Comments