top of page

2ஆம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் சபாநாயகர் அப்பாவு வாக்களித்தார்

  • Writer: Web feathers
    Web feathers
  • Oct 9, 2021
  • 2 min read

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (அக்.9) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துவரும் நிலையில் பல இடங்களிலும் கொட்டும் மழைக்கு இடையேயும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கிறது.


காஞ்சிபுரத்தில் குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர், ஆகிய ஒன்றியங்களில், செங்கல்பட்டில் அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், காட்டாங்குளத்தூர் ஆகிய ஒன்றியங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.


விழுப்புரம் கானை, கோலியனூர், மயிலம், மரக்காணம், மேல் மலையனூர், வல்லம் ஒன்றியங்களிலும் கள்ளக்குறிச்சியில் சின்னசேலம், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், கள்வராயன்மலை, தியாகத்துருகம் ஒன்றியங்களிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

வேலூரில் அணைக்கட்டு, கணியம்பாடி ஒன்றியங்களிலும், திருப்பத்தூரில் ஆலங்காயம், மாதனூர் ஒன்றியங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.


ராணிப்பேட்டையில் அரக்கோணம், காவேரிப்பாக்கம், நெமிலி, சோளிங்கர் ஒன்றியங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

நெல்லையில் களக்காடு, நாங்குநேரி, ராதாபுரம், வள்ளியூர் ஒன்றியங்களிலும் தென்காசியில் கடையநல்லூர், சங்கரன்கோவில், குருவிக்குளம், செங்கோட்டை ஒன்றியங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.


62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 626 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 1,324 ஊராட்சித் தலைவர்கள், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் இதர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 130 உள்ளாட்சி பதவிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தலுக்காக மொத்தம் 6.652 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 34,65,724 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.


விழுப்புரத்தில் தேர்தல் புறக்கணிப்பு:

விழுப்புரம் மாவட்டம் அவியூர் ஊராட்சிக்கு உட்பட்ட விற்பட்டு அருகே மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். விற்பட்டை தனி ஊராட்சியாக பிரித்துக் கொடுக்காததால் மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


அப்பாவு வாக்களிப்பு:

நெல்லை வள்ளியூர் ஒன்றியத்தில் 2ஆம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் சபாநாயகர் அப்பாவு வாக்களித்தார். பணகுடி அருகே உள்ள தனது சொந்த கிராமமான லெப்பை குடியிருப்பு பெரிய நாயகிபுரம் ஏடிஎச் உயர்நிலைப் பள்ளியில் தனது குடும்பத்தினருடன் வாக்குக்கினை பதிவு செய்தார்.


மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் நேரில் ஆய்வு செய்தார்.பின்னர் ஆவரைகுளத்தில் அவர் அளித்தப் பேட்டியில், "பதட்டமான வாக்குச்சாவடிகள் என 70 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டன. மீண்டும் ஒரு ஆய்வுக்குட்படுத்தி 20க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளை இந்த வரிசையில் சேர்க்கப்பட்டன. பதட்டமான வாக்குச்சாவடிகள் கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.


அதேபோல், வள்ளியூர் யூனியன் சங்கனாபுரம் வாக்குச்சாவடியில் இன்று காலை தனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வந்த மூதாட்டியை மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் சையத் நிஸார் தோளில் தூக்கிச் சென்று வாக்களிக்க உதவி செய்தார். அவருக்குப் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


சிவசைலத்தில் மறுவாக்குப்பதிவு:

தென்காசி கடையம் ஒன்றியத்துக்கு உற்பட்ட சிவசைலம் ஊராட்சி மூன்றாவது வார்டுக்கு மறுவாக்குப்பதிவு நடக்கிறது.


தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்தில் கடந்த 6-ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடந்தது. இதற்காக சிவசைலம் ஊராட்சியில் அமைக்கப்பட்டிருந்த 130-வது எண் வாக்குச்சாவடியில் 2, 3-வது வார்டு வாக்காளர்கள் வாக்களித்தனர்.


இந்த ஊராட்சியில் 2-வது வார்டு உறுப்பினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால், 2-வது வார்டு வாக்காளர்களுக்கு ஊராட்சித் தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்டக்குழு உறுப்பினர் ஆகியோரை தேர்வு செய்வதற்கான 3 வாக்குச்சீட்டுகளை மட்டுமே வழங்க வேண்டும். 3-வது வார்டு வாக்காளர்களுக்கு மட்டும் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான வாக்குச்சீட்டு உட்பட 4 வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட வேண்டும்.


வாக்குச்சாவடியில் பணியில் இருந்த ஊழியர்கள் 2-வது வார்டு வாக்காளர்களுக்கும் ஊராட்சி வார்டு உறுப்பினரை தேர்வு செய்வதற்கான வாக்குச் சீட்டுகளை கொடுத்துள்ளனர்.


வாக்காளர்களும் அதனை பெற்று, வாக்களித்துள்ளனர். இதனால், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில், சிவசைலம் ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மட்டும் இன்று மறு தேர்தல் நடைபெறுகிறது.


பதிவு: இந்து தமிழ் திசை

Comments


Post: Blog2_Post
  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2021 by Web feathers | வலை சிறகுகள். Proudly created with Wix.com

bottom of page