top of page

2வது கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடக்கம்

  • Writer: Web feathers
    Web feathers
  • Oct 9, 2021
  • 2 min read

செங்கல்பட்டு, காஞ்சீபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 12 ஆயிரத்து 341 பதவிகளுக்கு இன்று 2வது கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடங்கியது.


தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

முதல்கட்ட தேர்தல் 6-ந் தேதி நடந்து முடிந்தது. 14 ஆயிரத்து 662 பதவியிடங்களுக்கு நடந்த இந்த தேர்தலில் 77.43 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்குபெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் 74 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.


இதில் 9 மாவட்டங்களில் உள்ள 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகள், 626 ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிகள், 1,324 கிராம ஊராட்சி தலைவர் பதவிகள், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 12 ஆயிரத்து 341 இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. பிரசாரம் நேற்று முன்தினம் மாலை நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து 2-ம் கட்ட வாக்குப்பதிவுக்காக 6 ஆயிரத்து 652 வாக்குச்சாவடிகள் தயார்நிலையில் உள்ளன. இந்த தேர்தலில் 34 லட்சத்து 65 ஆயிரத்து 724 பேர் வாக்களிக்க உள்ளனர்.

இந்த தேர்தலில் ஒவ்வொரு வாக்காளரும் கிராம ஊராட்சி உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு என 4 ஓட்டு போடவேண்டும்.


ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் வாக்கு பெட்டிகள், வாக்கு சீட்டுகள், அழியாத மை ஆகியவை வாகனங்கள் மூலம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டுப்பெட்டிகள், அந்தந்த வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகிறது. இதன்பின்னர், 12-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.


இந்த 9 மாவட்டங்களை தவிர்த்து ஏனைய 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி இடங்களுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.


அதன்படி, இந்த மாவட்டங்களில் 13 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 40 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 106 கிராம ஊராட்சி தலைவர், 630 கிராம ஊராட்சி உறுப்பினர் என மொத்தம் 789 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.


இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் 20-ந் தேதி பதவி ஏற்கிறார்கள். 22-ந் தேதி மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி துணைத்தலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.


இந்த நிலையில், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 12 ஆயிரத்து 341 பதவிகளுக்கு, 2வது கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. இதில் வாக்காளர்கள் ஆர்வமுடன் காலை முதல் வந்து வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

பதிவு: தினத்தந்தி


Comentarios


Post: Blog2_Post
  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2021 by Web feathers | வலை சிறகுகள். Proudly created with Wix.com

bottom of page